Sunday, May 3, 2015

சேது சமுத்திரத் திட்டம்
இந்தியா டுடே நவம்பர் 19 2014





சேது சமுத்திரத் திட்டம் -சுற்றுச்சூழல் வாதிகளின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுங்கள்
இந்தியா டுடே-நவம்பர் 19-2014,,,,விருந்தினர் பக்கம்-எடிட் செய்யப்படாதது

சேது சமுத்திரத் திட்டம் மண்ணைத் தோண்டுகிற ஒரு திட்டம், அதுவும் நீருக்குள் இருக்கும் மண்ணை .
தமிழகத்தில் ஆட்சி மாறும்போதும், நடுவண் அரசில் ஆட்சி மாறும்போதும் இத்திட்டம் உயிர்ப்பிக்கப்படும். உண்மையில் அறிவியலுக்கும் அரசியலுக்கும் ஏற்படும் மோதல்களும், அறிவியலlலில்லாதவை அரசியலாக்கப்படும் காட்சி நாடகங்களே இத்திட்டம். சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை மூன்று பார்வைகள் உள்ளன. சேது சமுத்திரத் திட்டம் தமிழனின் நீண்ட காலக் கனவு, அது உடனடியாக நிறைவேறினால் தமிழர்கள் மகிழ்ச்சியடைவார்கள், தமிழகம் கொழிக்கும் என்று திராவிடக் கட்சியைச் சார்ந்தவர்களும், தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களும் நீண்ட நாட்களாகச் சொல்லி வருகிறார்கள்.
இரண்டாவது பார்வை, இத்திட்டம் லாபம் தரும் திட்டமாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில், அறிவியல் பூர்வமாகச் சாத்தியமில்லை என்று மக்கள் அறிவியலாளர் மருத்துவர் ரமேஷ் உட்பட இந்தியாவின் அறிவியலாளர்கள் இதில் அடங்குவர். மூன்றாவது பார்வை, இது சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கு, எனவே திட்டமே தேவையில்லை எனக் குரல் கொடுக்கு சுற்றுச்சூழல் வாதிகள்.
ராமர் பாலம் என்ற பெயரில் சேதுக் கால்வாய் திட்டம் சேதுமதத் திட்டமாக மாறியபோது, அணு உலையைச் சுற்றுச்சூழல் பார்வையில் எதிர்த்தவர்கள் கூட சேதுசமுத்திரத் திட்டத்தையும் மீண்டும் ‘தமிழனின் கனவு’ என்று ஆதரிக்கத் தொடங்கினர். எளிமையாகச் சொன்னால் அறிவியல், சுற்றுச்சூழல் இரண்டையும் தாண்டி அரசியலே இத்திட்டத்தை வழி நடத்துகிறது. ஏற்கனவே காங்கிரஸ், தி.மு-.க கூட்டணியில் 1000 கோடி செலவு செய்து தோண்டிய கால்வாய் இப்போது எங்கே இருக்கிறது?
இப்போது மீண்டும் மதவாத பா.ஜ.க. தமிழகத்தில் வேறூன்றுவதற்காக இத்திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. ராமர் பாலத்தை இழக்காமல் மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்கிறார்கள். எல்லாம் சரிதான், ஆனால் சுதந்திரதிற்குப் பிறகு எல்லா வளர்ச்சித் திட்டங்களும் மாபெரும் சுற்றுச்சூழல் அழிவையே ஏற்படுத்தியுள்ளன. பிரமாண்டமான அணைக்கட்டுகள் தொடங்கி, அணு உலைகள் வரை நன்மைகளை விட தீமைகள் அதிகம். ஆனாலும், சுற்றுச்சூழல்வாதிகளின் குரலை யாரும் செவிமடுப்பதில்லை.
சேது சமுத்திரத் திட்டம் ஏன் வேண்டாம்?
முதலில் சேதுக் கால்வாய்த் திட்டம் தோண்ட இருக்குமிடம் உலகின் முக்கியமான உயிர்ச்சூழல் பகுதி என யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடாவாகும். இங்கு அரிய பவளப்பாறைகளும், 600 வகை மீன்களும், கடல்குதிரைகளும், மிக அரிய அவுளியா (கடல்பசு)க்களும் நிறைந்த பகுதியாகும். 21 சிறுதீவுகள் இங்கு உள்ளன. இன்றும் அளவிடமுடியத நுண்ணுயிர்களும் பெருகி உள்ளன. மேலும் எப்போதும் எல்லோராலும் உதாரணமாகச் சொல்லப்படும் பனாமா கால்வாய் உட்பட எல்லாக் கால்வாய்களும் நிலத்தில் தோண்டப்பட்டவை, கடலில் தோண்டப்பட்டவையல்ல. கடல் என்னும் ஒற்றை உயிரில் நீர் மட்டும் அலைவதில்லை மணலும் நெடுந்தூரம் பயணம் செய்கிறது.
தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று கடலின் நீரோட்டங்களையும் மணலின் ஓட்டத்தையும் மாற்றும் தன்மையுடையது. மேலும், மண்குவிதல், கடலின் தரையின் கீழே என்ன இருக்கிறது, புயல் சூறாவளி போன்ற காலங்களில் மண் குவிதல் அதிகமாக உருவாகு நிலை இதைப்பற்றியெல்லாம் எந்தவொரு அறிவியல்பூர்வமான ஆய்வும் செய்யப்படவில்லை.
எனவேதாம் இந்த கடினமான பாறை மற்றும் மணலை எடுப்பதற்கு எந்த நிறுவனங்களும் முன்வருவதில்லை. தி.மு.க அரசில் ஆயிரம் கோடி செலவழித்து தோண்டப்பட்ட இடம் இப்போது என்னவாயிற்று என்று நாம் ஆய்வு செய்ய வேண்டும். பயணம் செய்யும் மணல் நிச்சயம் தோண்டப்பட்ட இடத்தை மூடியிருக்கும். ஆனாலும், கடலின் மண்ணை தொடர்ந்து தோண்டுவோம் என்று நடுவண், மாநில அரசுகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.சீனாவின் பிடியிலிருக்கும் இலங்கையின் செயல்பாடுகளைக் கணக்கெடுத்தாலும் கூட இத்திட்டம் நமக்கு அச்சத்தையே தருகிறது.
மணலை எடுத்து எங்கே கொட்டுவீர்கள் என்ற கேள்விக்கு இதுவரை எந்தவிதப் பதிலுமில்லை.ஒரு வேளை இத்திட்டம் நிறைவேறுமானால் நீர் முற்றிலும் மாசுபட்டு, கடல்வாழ் உயிரினங்கள் அழியும் என்பதற்கும் எந்தவிதப் பதிலுமில்லை. மேலும் பவளப்பாறைகள் அழிப்பு, கடற்கரை மண்ணரிப்பு, வெடிகுண்டை உடைத்து மணலைப் பிளக்க வேண்டியிருக்கும். இவையெல்லாமே கடலையும் மீனவர்களையும் அழிக்கும். சுமார் 5 லட்சம் மீனவர்களாவது இடம்பெயர்வார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. கப்பல்களின் அதிகமான போக்குவரத்து மேலும் மீனவர்களுக்கும்,கடல் உயிரினங்களுக்கும் அழிவையே தரும். இவ்வளவு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இருந்தும், இத்திட்டம் வருவதென்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதாகும். ராமர் பாலம், மத நம்பிக்கையென்றால் இப்பூவுலகை அழித்தால் அது நம்மை மீண்டும் அழிக்கும் என்பது சுற்றுச்சூழல் வாதிகளின் நம்பிக்கை, அறிவியல். சுற்றுச்சூழல் வாதிகளின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுங்கள், சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிடுங்கள்...

No comments:

Post a Comment